(1)
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை
(2)
பூண்டதொர் கேழல் எயிறும், பொன்திகழ் ஆமை புரள
நீண்ட திண்தோள் வலம்சூழ்ந்து, நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(3)
ஒத்த வடத்திள நாகம், உருத்திர பட்டம் இரண்டும்
முத்து வடக் கண்டிகையும், முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமும், அதிகைச் சேணுயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(4)
மடமான் மறிபொற் கலையும், மழுப்பாம்பு, ஒருகையில் வீணை
குடமால் வரைய திண்தோளும், குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம், இருநிலனேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(5)
பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்
வலமேந்து இரண்டு சுடரும், வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(6)
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும், பயின்றறியாதன பாட்டும்
அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(7)
கொலைவரி வேங்கை அதளும், குலவோடிலங்கு பொன்தோடும்
விலைபெறு சங்கக் குழையும், விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணியார்ந்திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(8)
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம், பல்லாயிரம்கொள் கருவி
நாடற்கரியதொர் கூத்தும், நன்குயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(9)
சூழும் அரவத் துகிலும், துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச, அஞ்சாது அருவரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரிபொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
(10)
நரம்பெழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க மலையை
உரங்களெல்லாம் கொண்டெடுத்தான், ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான், வளர்பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதும் இல்லை
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...