திருவதிகை – அப்பர் தேவாரம் (3):

<– திருவதிகை

(1)
வெறிவிரவு கூவிளநல் தொங்கலானை
    வீரட்டத்தானை, வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப், புள்ளூர்தியானைப்
    பொன் நிறத்தினானைப், புகழ் தக்கானை
அறிதற்கரிய சீர்அம்மான் தன்னை
    அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்தானை, இறைவன் தன்னை
    ஏழையேன் நான்பண்டு இகழ்ந்தவாறே
(2)
வெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னை
    வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப்
    பொன் பிதிர்ந்தன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை
    வாரா உலகருள வல்லான் தன்னை
எள்கவிடு பிச்சை ஏற்பான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(3)
முந்தியுலகம் படைத்தான் தன்னை
    மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் திங்கள் அணிந்தான் தன்னைத்
    தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
    செழுங்கெடில வீரட்டம் மேவினானை
எந்தை பெருமானை, ஈசன் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(4)
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை
    மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும் அலைகடலும் ஆனான் தன்னை
    அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னைக்
கந்தருவம் செய்திருவர் கழல்கை கூப்பிக்
    கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழச் செல்வானை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(5)
ஒருபிறப்பிலான் அடியை உணர்ந்தும் காணார்
    உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வரு பிறப்பொன்றுணராது மாசு பூசி
    வழிகாணாதவர் போல்வார் மனத்தனாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகையூரன்
    அம்மான்தன் அடியிணையே அணைந்து வாழாது
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்டு
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(6)
ஆறேற்க வல்ல சடையான் தன்னை
    அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக்
    கோல் வளைக்கை மாதராள் பாகன் தன்னை
நீறேற்கப் பூசும் அகலத்தானை
    நின்மலன் தன்னை, நிமலன் தன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(7)
குண்டாக்கனாய் உழன்று கையிலுண்டு
    குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி
உண்டி உகந்தமணே நின்றார் சொற்கேட்டு
    உடனாகி உழிதந்தேன் உணர்வொன்றின்றி
வண்டுலவு கொன்றையங்கண்ணியானை
    வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை
எண்திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(8)
உறிமுடித்த குண்டிகை தங்கையில் தூக்கி
    ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக்கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையிலுண்டு
    கண்டார்க்குப் பொல்லாத காட்சியானேன்
மறிதிரைநீர்ப் பவ்வ நஞ்சுண்டான் தன்னை
    மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(9)
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை
    நெற்றிமேல் கண்ணொன்றுடையான் தன்னை
மறையானை, மாசொன்றிலாதான் தன்னை
    வானவர்மேல் மலரடியை வைத்தான் தன்னைக்
கறையானைக், காதார் குழையான் தன்னைக்
    கட்டங்கம் ஏந்திய கையினானை
இறையானை, எந்தை பெருமான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(10)
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
    தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர் தீர்த்திங்கடிமை கொண்ட
    வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான் தன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலும் ஊதும்
    கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
எல்லை காண்பரியானை, எம்மான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
(11)
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள்
    முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலைபறிக்கும் தன்மையர்களாகி நின்று
    தவமே என்று அவம் செய்து தக்கதோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
    மதனழியச் செற்ற சேவடியினானை
இலைமறித்த கொன்றையந்தாரான் தன்னை
    ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page