(1)
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க, வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர், மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மறிக் கையர், செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே
(2)
ஏறினர் ஏறினை, ஏழை தன்னொரு
கூறினர், கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர், ஆறிடு சடையர், பக்கமும்
கீறின உடையினர் கெடில வாணரே
(3)
விடந்திகழ் கெழுதரு மிடற்றர், வெள்ளைநீறு
உடம்பழகெழுதுவர், முழுதும் வெண்ணிலாப்
படர்ந்தழகெழு தரு சடையில் பாய்புனல்
கிடந்தழகெழுதிய கெடில வாணரே
(4)
விழுமணி அயிலெயில் அம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர், செய்ய வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே
(5)
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்
மழுவினர், மான்மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே
(6)
அங்கையில் அனலெரி ஏந்தி, ஆறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர், மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர், தென்திசைக்
கங்கையதெனப்படும் கெடில வாணரே
(7)
கழிந்தவர் தலைகலன் ஏந்திக் காடுறைந்து
இழிந்தவர் ஒருவரென்றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்த தேனுகர் தரும் கெடில வாணரே
(8)
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்
கிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே
(9)
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி அரையதாகவும்
நெறியுறு குழலுமை பாகமாகவும்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே
(10)
பூண்டதேர் அரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோள் அவைபட அடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதரும் கெடில வாணரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...