(1)
இரும்பு கொப்பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகமாகச்
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலைநீர் சடையிலேற்ற
அரும்பு கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே
(2)
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண்பிறையும் சூடி
வம்பு கொப்பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகை வீரட்டனாரே
(3)
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவியேத்தச்
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண்ணீறுபூசி
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்தென்றும்
அடையும் கொப்பளித்த சீரார் அதிகை வீரட்டனாரே
(4)
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேளுர் உருவ மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இ டர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர் வண்டுண்டு பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே
(5)
நீறு கொப்பளித்த மார்பர் நிழல்திகழ் மழுஒன்றேந்திக்
கூறு கொப்பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப்பளித்த பாதம் இமையவர் பரவியேத்த
ஆறு கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே
(6)
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் பரவியேத்தப்
பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை அண்ணல்
சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரிகுழல் பாகமாக
அணங்கு கொப்பளித்த மேனி அதிகை வீரட்டனாரே
(7)
சூலம் கொப்பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி
நூலும் கொப்பளித்த மார்பில் நுண்பொறி அரவம் சேர்த்தி
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண்பாடும் கொன்றை
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகை வீரட்டனாரே
(8)
நாகம் கொப்பளித்த கையர் நான்மறையாய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடியாட
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகை வீரட்டனாரே
(9)
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர்ஏத்த
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர் அதிகை வீரட்டனாரே
(10)
தொண்டை கொப்பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை அல்குல்
கொண்டை கொப்பளித்த கோதைக் கோல்வளை பாகமாக
வண்டு கொப்பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண்ணீர்க் கெடில வீரட்டனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...