திருவதிகை – அப்பர் தேவாரம் (7):

<– திருவதிகை

(1)
நம்பனே எங்கள் கோவே, நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ, என்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே, திகழ்மலர்ப் பாதம் காண்பான்
அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே
(2)
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன், வேண்டிற்றொன்றைவர் வேண்டார்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்
ஐயநான் அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே
(3)
நீதியால் வாழ மாட்டேன் நித்தலும் தூயேன் அல்லேன்
ஓதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உந்தன் தூமலர்ப் பாதம் காண்பான்
ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே
(4)
தெருளுமா தெருள மாட்டேன், தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியும் காணேன்
இருளுமா மணிகண்டா நின் இணையடி இரண்டும் காண்பான்
அருளுமாறருள வேண்டும் அதிகை வீரட்டனீரே
(5)
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்குழிதரும் ஆதனேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே
(6)
உறு கயிறூசல் போல ஒன்று விட்டொன்று பற்றி
மறு கயிறூசல் போல வந்து வந்துலவு நெஞ்சம்
பெறு கயிறூசல் போலப் பிறைபுல்கு சடையாய், பாதத்து
அறுகயிறு  ஊசலானேன் அதிகை வீரட்டனீரே
(7)
கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன் கணோக்கி உணர்வெனும் இமைதிறந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனும் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே
(8)
மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரமெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினால் அலமந்திட்டேன் அதிகை வீ ட்டனீரே
(9)
பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன்றேறுவானே
பணிவிடா இடும்பை என்னும் பாசனத்தழுந்துகின்றேன்
துணிவிலேன் தூயன்அல்னேன் தூமலர்ப் பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகை வீரட்டனீரே
(10)
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பிரானே உன் திருப்பாதம் காண்பான்
அருவனே அருள வேண்டும் அதிகை வீரட்டனீரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page