(1)
பூவார் மலர் கொண்டடியார் தொழுவார், புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழை நின்றதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்தணையும் சாரல் அண்ணாமலையாரே
(2)
மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்தடக்கும் அதுவும் நன்மைப் பொருள்போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அதுவேறி
அஞ்சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே
(3)
ஞானத் திரளாய் நின்ற பெருமான், நல்ல அடியார்மேல்
ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத் திரளோடினமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்தணையும் சாரல் அண்ணாமலையாரே
(4)
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங்குறங்கும் சாரல் அண்ணாமலையாரே
(5)
உருவில்திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்
செருவில் ஒருகால் வளையவூன்றிச் செந்தீ எழுவித்தார்
பருவில் குறவர் புனத்தில் குவித்த பருமா மணிமுத்தம்
அருவித் திரளோடிழியும் சாரல் அண்ணாமலையாரே
(6)
எனைத்தோர் ஊழி அடியாரேத்த இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்
கனைத்த மேதி காணாதாயன் கைம்மேல் குழலூத
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே
(7)
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறைகோயில்
முந்தியெழுந்த முழவின்ஓசை முதுகல் வரைகள் மேல்
அந்திப்பிறை வந்தணையும் சாரல் அண்ணாமலையாரே
(8)
மறம்தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான்தோள்
நிறம்தான் முரிய நெரியவூன்றி நிறைய அருள்செய்தார்
திறம்தான் காட்டி அருளாய்என்று தேவர்அவர் வேண்ட
அறம்தான் காட்டி அருளிச் செய்தார் அண்ணாமலையாரே
(9)
தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை
மூடியோங்கி முதுவேய் உகுத்த முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார் குவித்துக் கொள்ள வம்மினென்று
ஆடிப்பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே
(10)
தட்டையிடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா, பேணித் தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள் பங்கர் மன்னி உறைகோயில்
அட்டம் ஆளித்திரள் வந்தணையும் அண்ணாமலையாரே
(11)
அல்லாடரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை
நல்லார் பரவப் படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான பத்தும் இவைகற்று
வல்லாரெல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே
2 Comments
Leave a Comment
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
Pathigam 4 is இழைத்த “இடையாள்”…its not வடையாள்
சிவ சிவ!! மாற்றி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி!!