திருவண்ணாமலை – சம்பந்தர் தேவாரம் (2):

(1)
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை, திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்  மழலை முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவணம் அறுமே
(2)
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார் வினையிலரே
(3)
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே
(4)
உதிரும்மயிர் இடுவெண்தலை கலனா உலகெல்லாம்
எதிரும்பலி உணலாகவும் எருதேறுவதல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிரும்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை அதுவே
(5)
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்து வெள்ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவஞ்சடை உலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே
(6)
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகும்தனை துணிவார்பொடி அணிவார்அதுபருகிக்
கருகும் மிடறுடையார், கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்குறுநோய் அடையாவே
(7)
கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்தலை உதையுண்டவை உருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே
(8)
ஒளிறூபுலி அதள்ஆடையன், உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம் பிடித்துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன், இராவணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே
(9)
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில் புகழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்அடி சரணே
(10)
வேர்வந்துற மாசூர்தர வெயில் நின்றுழல்வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையா வருவாரும்
ஆரம்பர் தமுரை கொள்ளல்மின், அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே
(11)
வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ எயிலெய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்புந்துவ குயில்ஆலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page