(1)
ஓதிமா மலர்கள் தூவி, உமையவள் பங்கா, மிக்க
சோதியே, துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே, அமரர் கோவே, அணி அணாமலையுளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே
(2)
பண்தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க, நீல
கண்டனே, கார்கொள் கொன்றைக் கடவுளே, கமல பாதா
அண்டனே, அமரர் கோவே, அணி அணாமலையுளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லிலேனே
(3)
உருவமும் உயிருமாகி, ஓதிய உலகுக்கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான், மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணாமலைஉளாய் அண்டர் கோவே
மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே
(4)
பைம்பொனே பவளக் குன்றே, பரமனே பால்வெண்ணீறா
செம்பொனே மலர்செய் பாதா, சீர்தரு மணியே, மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலையுளானே
என்பொனே உன்னை அல்லால் ஏதுநான் நினைவிலேனே
(5)
பிறையணி முடியினானே, பிஞ்ஞகா, பெண்ணோர் பாகா
மறைவலா, இறைவா, வண்டார் கொன்றையாய், வாம தேவா
அறைகழல் அமரர்ஏத்தும் அணி அணாமலையுளானே
இறைவனே உன்னை அல்லால் யாதுநான் நினைவிலேனே
(6)
புரிசடை முடியின் மேலோர் பொருபுனல் கங்கை வைத்துக்
கரியுரி போர்வையாகக் கருதிய காலகாலா
அரிகுல மலிந்த அண்ணா மலையுளாய், அலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே
(7)
இரவியும் மதியும் விண்ணும், இருநிலம் புனலும் காற்றும்
உரகமார் பவனம் எட்டும், திசையொளி உருவமானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி அணி அணாமலையுளானே
பரவுநின் பாதம்அல்லால் பரமநான் பற்றிலேனே
(8)
பார்த்தனுக்கன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்து வந்தீண்டு கொண்டல் அணி அணாமலையுளானே
தீர்த்தனே நிந்தன் பாதத் திறமலால் திறமிலேனே
(9)
பாலுநெய் முதலா மிக்க பசுவில் ஐந்தாடுவானே
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம் அணி அணாமலையுளானே
வாலுடை விடையா உந்தன் மலரடி மறப்பிலேனே
(10)
இரக்கமொன்று யாதுமில்லாக் காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியினாலே
அரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமரர்ஏறே
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பிலேனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...