திருவண்ணாமலை – அப்பர் தேவாரம் (2):

<– திருவண்ணாமலை

(1)
பட்டி ஏறுகந்தேறிப் பல இல்லம்
இட்டமாக இரந்துண்டு உழிதரும்
அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப்போம் வினை கேடில்லை காண்மினே
(2)
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கென்றவர்
சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நற்றவத்தொடு ஞானத்திருப்பரே
(3)
பல்லிலோடு கையேந்திப் பலஇல்லம்
ஒல்லை சென்றுணங்கல் கவர்வார்அவர்
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்லவாயின நம்மை அடையுமே
(4)
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன்றென் கொலோ
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப்போகும் நம் மேலை வினைகளே
(5)
தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம் நமது உள்ள வினைகளே
(6)
கட்டி ஒக்கும் கரும்பினிடைத், துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்தி அண்ணாமலை மேவிய
நட்டமாடியை நண்ண நன்காகுமே
(7)
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப் பொன்னன் அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே
(8)
கண்டம் தான் கறுத்தான், காலனார் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்தோங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும் நம் மேலை வினைகளே
(9)
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்
அந்திவாய் ஒளியான்தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே
(10)
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும் நாம்செய்த பாவங்களானவே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page