திருவண்ணாமலை – அப்பர் தேவாரம் (3):

<– திருவண்ணாமலை

(1)
வட்டனை, மதி சூடியை, வானவர்
சிட்டனைத், திருஅண்ணாமலையனை
இட்டனை, இகழ்ந்தார் புரம் மூன்றையும்
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ
(2)
வானனை, மதி சூடிய மைந்தனைத்
தேனனைத், திருஅண்ணாமலையனை
ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ
(3)
மத்தனை, மதயானை உரித்த எம்
சித்தனைத், திருஅண்ணாமலையனை
முத்தனை, முனிந்தார் புரமூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ
(4)
காற்றனைக், கலக்கும் வினை போயறத்
தேற்றனைத், திருஅண்ணாமலையனைக்
கூற்றனைக், கொடியார் புர மூன்றெய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ
(5)
மின்னனை, வினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்னனைத், திருஅண்ணாமலையனை
என்னனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ
(6)
மன்றனை, மதியாதவன் வேள்விமேல்
சென்றனைத், திருஅண்ணாமலையனை
வென்றனை, வெகுண்டார் புர மூன்றையும்
கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ
(7)
வீரனை, விடமுண்டனை, விண்ணவர்
தீரனைத், திருஅண்ணாமலையனை
ஊரனை, உணரார் புர மூன்றெய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ
(8)
கருவினைக், கடல்வாய் விடமுண்ட எம்
திருவினைத், திருஅண்ணாமலையனை
உருவினை, உணரார் புர மூன்றெய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ
(9)
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனைத், திருஅண்ணாமலையனைக்
கருத்தனைக், கடியார் புர மூன்றெய்த
அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ
(10)
அரக்கனை அலறவ் விரலூன்றிய
திருத்தனைத், திருஅண்ணாமலையனை
இரக்கமாய் என் உடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page