திருமுதுகுன்றம் – சுந்தரர் தேவாரம் (1):

<– திருமுதுகுன்றம்

(1)
நஞ்சிஇடை இன்று நாளை என்றும்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வதென் அடிகேள்சொலீர்
பஞ்சியிடப் புட்டில் கீறுமோ, பணியீர் அருள்
முஞ்சியிடைச் சங்கம் ஆர்க்கும் சீர்முதுகுன்றரே
(2)
ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித்தனையும் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கண்சென்று வளைக்கப்பட்டு வருந்திப்போய்
மூரிக்களிறு முழக்கறா முதுகுன்றரே
(3)
தொண்டர்கள் பாட, விண்ணோர்களேத்த உழிதர்வீர்
பண்டகந்தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறம்காக்கும் சீர்
மொண்டகை வேள்வி முழக்கறா முதுகுன்றரே
(4)
இளைப்பறியீர், இம்மை ஏத்துவார்க்கம்மை செய்வதென்
விளைப்பறியாத வெங்காலனை உயிர் வீட்டினீர்
அளைப்பிரியா அரவல்குலாளொடு கங்கைசேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே
(5)
ஆடியசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ
மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலைசூழ் முதுகுன்றரே
(6)
இழைவளர் நுண்ணிடை மங்கையோடு இடுகாட்டிடைக்
குழைவளர் காதுகள் மோதநின்று குனிப்பதே
மழைவளரும் நெடுங்கோட்டிடை மத யானைகள்
முழை வளராளி முழக்கறா முதுகுன்றரே
(7)
சென்றிலிடைச் செடிநாய் குரைக்கச் சேடிச்சிகள்
மன்றிலிடைப் பலிதேரப் போவது வாழ்க்கையே
குன்றிலிடைக் களிறாளி கொள்ளக் குறத்திகள்
முன்றிலிடைப் பிடி கன்றிடும் முதுகுன்றரே
(8)
அந்தி திரிந்தடியாரும் நீரும் அகந்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக்குண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர் முதுகுன்றரே
(9)
செட்டிநின் காதலி ஊர்கள்தோறும் அறஞ்செய
அட்டுமின் சில்பலிக்கென்று அகங்கடை நிற்பதே
பட்டி வெள்ளேறுகந்தேறுவீர், பரிசென் கொலோ
முட்டி அடிதொழ நின்ற சீர்முதுகுன்றரே
(10)
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என்சொலார்
பத்தியினால் இடுவார் இடைப்பலி கொள்மினோ
எத்திசையும் திரையேற மோதிக் கரைகள்மேல்
முத்தி முத்தாறு வலஞ்செய்யும் முதுகுன்றரே
(11)
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரைப்
பித்தனொப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்றிவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார்
எத்தவத்தோர்களும் ஏத்துவார்க்கிடரில்லையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page