(1)
பொன்செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர், முதுகுன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவைஇவள் தன்முகப்பே
என் செய்தவாறடிகேள் அடியேன் இட்டளம் கெடவே
(2)
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர்
வம்பமரும் குழலாள் பரவைஇவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே
(3)
பத்தா பத்தர்களுக்கருள் செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தாரும் தடங்கண் பரவைஇவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
(4)
மங்கையொர் கூறமர்ந்தீர், மறை நான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர், திகழும் முதுகுன்றமர்ந்தீர்
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே
அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே
(5)
மையாரும் மிடற்றாய், மருவார் புரமூன்றெரித்த
செய்யார் மேனியனே, திகழும் முதுகுன்றமர்ந்தாய்
பையாரும் அரவேர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
(6)
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே
படியாரும் இயலாள் பரவைஇவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளீர் அடியேன் இட்டளம் கெடவே
(7)
கொந்தணவும் பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகைமேல்
வந்தணவும் மதிசேர் சடைமா முதுகுன்றுடையாய்
பந்தணவும் விரலாள் பரவை இவள் தன்முகப்பே
அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே
(8)
பரசாரும் கரவா பதினெண் கணமும் சூழ
முரசார் வந்ததிர முதுகுன்றம் அமர்ந்தவனே
விரைசேரும் குழலாள் பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
(9)
ஏத்தாதிருந்தறியேன் இமையோர் தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தாரும் குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே
(10)
பிறையாரும் சடை எம்பெருமான் அருளாய்என்று
முறையால் வந்தமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார் தங்குரிசில் வயல் நாவல்ஆரூரன் சொன்ன
இறையார் பாடல் வல்லார்க்கெளிதாம் சிவலோகமதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...