(1)
மத்தா வரைநிறுவிக் கடல்கடைந்த விடமுண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணனது இடமாம்
கொத்தார்மலர் குளிர் சந்தகில் ஒளிர் குங்குமம் கொண்டு
முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன்றடைவோமே
(2)
தழையார் வடவிய வீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதா உறை இடமாம்
மழை வானிடை முழவவ்வெழில் வளை வாளுகிர் எரிகண்
முழை வாளரி குமிறும்உயர் முதுகுன்றடைவோமே
(3)
விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனைஒண்
தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவனோடு
முளைமாமதி தவழும்உயர் முதுகுன்றடைவோமே
(4)
சுரர் மாதவர் தொகு கின்னரர் அவரோ தொலைவில்லா
நரரான பல் முனிவர்தொழ இருந்தான் இடம், நலமார்
அரசார் வர அணிபொற்கலன் அவை கொண்டு பன்னாளும்
முரசார் வரு மண மொய்ம்புடை முதுகுன்றடைவோமே
(5)
அறையார்கழல் அந்தன்தனை அயில்மூவிலை அழகார்
கறையார்நெடு வேலின்மிசை ஏற்றான்இடம் கருதில்
மறையாயின பலசொல்லிஒண் மலர் சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடைவோமே
(6)
ஏவார்சிலை எயினன் உருவாகி எழில் விசயற்கு
ஓவாத இன்னருள் செய்தஎம் ஒருவற்கிடம், உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக உடையார்
மூவாதபல் முனிவர்தொழு முதுகுன்றடைவோமே
(7)
தழல்சேர் தரு திருமேனியர், சசிசேர் சடைமுடியர்
மழமால் விடை மிகஏறிய மறையோன் உறைகோயில்
விழவோடொலி மிகு மங்கையர் தகும்ஆடக சாலை
முழவோடிசை நட முன்செயும் முதுகுன்றடைவோமே
(8)
செது வாய்மைகள் கருதிவ்வரை எடுத்த திறலரக்கன்
கதுவாய்கள் பத்தலறீஇடக் கண்டான்உறை கோயில்
மதுவாய செங்காந்தள் மலர் நிறையக் குறைவில்லா
முதுவேய்கள் முத்துதிரும் பொழில் முதுகுன்றடைவோமே
(9)
இயலாடிய பிரமன்அரி இருவர்க்கறிவரிய
செயலாடிய தீயார் உருவாகி எழுசெல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனல் படப்பைத் தடத்தருகே
முயலோடவெண் கயல்பாய் தரு முதுகுன்றடைவோமே
(10)
அருகரொடு புத்தரவர் அறியாஅரன், மலையான்
மருகன், வரும் இடபக்கொடி உடையான் இடம், மலரார்
கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடைவோமே
(11)
முகில்சேர்தரு முதுகுன்றுடையானை மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞான சம்பந்தன் உரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும் அடியவர்கட்கிடர் பாவம் அடையாவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...