(1)
மெய்த்தாறு சுவையும், ஏழிசையும், எண் குணங்களும், விரும்பு !நால்வே
தத்தாலும் அறிவொண்ணா, நடைதெளியப் பளிங்கே போல், அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட்கொரு தலைவன் கருதுமூர், உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே
(2)
வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர் கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலர்உதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றில் புகுந்துலவு முதுகுன்றமே
(3)
தக்கனது பெருவேள்விச் சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கனங்கி
மிக்க விதாதாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும் வருக்கை கதலி கமுகுயர் தெங்கின் குலைகொள் சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே
(4)
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலும் மாசுண நாணரி எரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே
(5)
இழைமேவு கலைஅல்குல் ஏந்திதிழையாள் ஒருபாலாய், ஒருபால் எள்காது
உழைமேவும் உரியுடுத்த ஒருவன் இருப்பிடம் என்பர், உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புக, ஒண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும் வளர்சாரல் முதுகுன்றமே
(6)
நகையார் வெண்தலை மாலை முடிக்கணிந்த நாதன் இடம், நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டம் கொண்டிரண்டு கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார் செந்தாமரைகள் முகமலர வயல்தழுவு முதுகுன்றமே
(7)
அறங்கிளரு நால்வேதம் ஆலின்கீழ் இருந்தருளி, அமரர்வேண்ட
நிறங்கிளர் செந்தாமரையோன் சிரம்ஐந்தின் ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள் மணித்தரளங்கள் வரத் திரண்டங்கெழில் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே
(8)
கதிரொளிய நெடுமுடி பத்துடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையை நிலைபெயர்த்த ஞான்று
மதில் அளகைக்கிறை முரல, மலரடி ஒன்றூன்றி, மறைபாட ஆங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்ஈந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே
(9)
பூவார்பொன் தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும்
ஓவாது கழுகேனமாய் உயர்ந்தாழ்ந்து உறநாடி உண்மை காணாத்
தேவாரும் திருவுருவன், சேருமலை செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே
(10)
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டுடையாரும் விரவலாகா
ஊனிகளாய் உள்ளார் சொற்கொள்ளாதும், உள்ளுணர்ந்தங்குய்மின் தொண்டீர்
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்தைம்புலன்கள் செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியும் முதுகுன்றமே
(11)
முழங்கொலி நீர் முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்திறையை, மூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக் கொண்டு
தழங்கெரி மூன்றோம்பு தொழில் தமிழ்ஞான சம்பந்தன் சமைத்த பாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம் ஆள்வர்தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...