(1)
நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கென்றும் இன்பமே
(2)
அத்தன் முதுகுன்றைப் பத்தியாகி நீர்
நித்தம் ஏத்துவீர்க்குய்த்தல் செல்வமே
(3)
ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையமும் அதாமே
(4)
ஈசன் முதுகுன்றை நேசமாகி நீர்
வாசமலர் தூவப் பாசவினை போமே
(5)
மணியார் முதுகுன்றைப் பணிவாரவர் கண்டீர்
பிணியாயின கெட்டுத் தணிவார் உலகிலே
(6)
மொய்யார் முதுகுன்றில் ஐயா என வல்லார்
பொய்யார் இரவோர்க்குச் செய்யாள் அணியாளே
(7)
விடையான் முதுகுன்றை இடையாதேத்துவார்
படையாயின சூழ உடையார் உலகமே
(8)
பத்துத் தலையோனைக் கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே
(9)
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே
(10)
தேரர் அமணரும் சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை நீர்நின்று உள்குமே
(11)
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...