(1)
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்றங்கடியார் தங்கட்கருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்றேத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே
(2)
எந்தை இவனென்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தியேறி இனமா மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே
(3)
நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானைப்
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
மூடும் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே
(4)
தெரிந்த அடியார் சிவனேயென்று திசைதோறும்
குருந்த மலரும், குரவின் அலரும் கொண்டேந்தி
இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்சீர்
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே
(5)
வைத்த நிதியே மணியே என்று வருந்தித் தம்
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்
கொத்தார் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்துந்து
முத்தாறுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே
(6)
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே
(7)
…
(8)
வாசம் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
பூசைசெய்து அடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே
(9)
அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடரஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே
(10)
கருகும் உடலார் கஞ்சியுண்டு கடுவே தின்று
உருகு சிந்தையில்லார்க்கயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணை மேலிருந்து நடஞ்செய் முதுகுன்றே
(11)
அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப்பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...