திருமுதுகுன்றம் – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருமுதுகுன்றம்

(1)
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்விடம்
விண்ணின் மாமழை பொழிந்திழிய வெள்ளருவி சேர்
திண்ணிலார் புறவணி திருமுதுகுன்றமே
(2)
வெறியுலாம் கொன்றையந்தாரினான், மேதகு
பொறியுலாம் அரவசைத்தாடி ஓர் புண்ணியன்
மறியுலாம் கையினான், மங்கையோடமர்விடம்
செறியுளார் புறவணி திருமுதுகுன்றமே
(3)
ஏறினார் விடைமிசை இமையவர் தொழ, உமை
கூறனார், கொல்புலித் தோலினார், மேனிமேல்
நீறனார், நிறைபுனல் சடையனார், நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுதுகுன்றமே
(4)
உரையினார் உறுபொருள் ஆயினான், உமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென ஓங்கு முத்தாறு மெய்த்
திரையினார் எறிபுனல் திருமுதுகுன்றமே
(5)
கடியவாயின குரல் களிற்றினைப் பிளிறவோர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி
வடியவாய் மழுவினன், மங்கையோடமர்விடம்
செடியதார் புறவணி திருமுதுகுன்றமே
(6)
கானமார் கரியின் ஈருரிவையார், பெரியதோர்
வானமார் மதியினோடு அரவர், தாம் மருவிடம்
ஊனமாயின பிணியவை கெடுத்துமையொடும்
தேனமார் பொழிலணி திருமுதுகுன்றமே
(7)
மஞ்சர்தாம் அலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோடாடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் அமர்விடம் அணிகலைச்
செஞ்சொலார் பயில்தரும் திருமுதுகுன்றமே
(8)
காரினார் அமர்தரும் கயிலைநன் மலையினை
ஏரினார் முடிஇராவணன் எடுத்தான் இற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தரும் திருமுதுகுன்றமே
(9)
ஆடினார் கானகத்தருமறையின் பொருள்
பாடினார், பலபுகழ்ப் பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை அயனுமால் இருவரும்
தேடினார் அறிவொணார் திருமுதுகுன்றமே
(10)
மாசுமெய் தூசுகொண்டுழல் சமண் சாக்கியர்
பேசுமெய் உளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்
தேசமார் புகழ்மிகும் திருமுதுகுன்றமே
(11)
திண்ணினார் புறவணி திருமுதுகுன்றரை
நண்ணினான் காழியுண் ஞானசம்பந்தன் சொல்
எண்ணினால் ஈரைந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கில்லையாம் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page