(1)
கருமணியைக் கனகத்தின் குன்றொப்பானைக்
கருதுவார்க்காற்ற எளியான் தன்னைக்
குருமணியைக், கோளரவொன்றாட்டுவானைக்
கொல்வேங்கை அதளானைக், கோவணனை
அருமணியை, அடைந்தவர்கட்கு அமுதொப்பானை
ஆனஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
திருமணியைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(2)
காரொளிய கண்டத்தெம் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்கம் ஏந்தினானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
பால்மதியம் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்கும்
சீரொளியைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(3)
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை
ஏறூர்ந்த பெம்மானை எம்மான் என்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
முத்தினை என்மணியை மாணிக்கத்தை
முளைத்தெழுந்த செழும்பவளக் கொழுந்தொப்பானைச்
சித்தனையென் திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(4)
ஊன்கருவின் உள்நின்ற சோதியானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண்டானைக்
கான்திரிந்து காண்டீபம் ஏந்தினானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான் தெரிந்தங்கடியேனை ஆளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த
தீங்கரும்பைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(5)
தக்கனது பெருவேள்வி தகர்த்தானாகித்
தாமரையான் நான்முகனும் தானேயாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகாசம்மாய்
மேலுலகுக்கப்பாலாய் இப்பாலானை
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு
அங்கங்கே அறுசமயமாகி நின்ற
திக்கினையென், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(6)
புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்
கடைதோறும் இடுபிச்சைக்கென்று செல்லும்
திகழொளியைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(7)
போர்த்தானை இன்னுரி தோல் பொங்கப் பொங்கப்
புலிஅதளே உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்
காலனையும் குரைகழலால் காய்ந்தான் தன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்கும் தொண்டர்
வல்வினை வேரறும் வண்ணம் மருந்துமாகித்
தீர்த்தானைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(8)
துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்கும் தானேயாகிப்
பெண்ணினோடு ஆணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(9)
பொற்றூணைப், புலால்நாறு கபாலமேந்திப்
புவலோகம் எல்லாம் உழிதந்தானை
முற்றாத வெண்திங்கள் கண்ணியானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன்றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக்
கருதாதார் புரமூன்றும் எரிய அம்பால்
செற்றானைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
(10)
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
எழுநரம்பின் இசைபாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப், பூந்துருத்தி மேயான் தன்னைப்
புண்ணியனை, விண்ணவர்கள் நிதியம் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியம் சடைவைத்து மாலோர் பாகம்
திகழ்ந்தானைத், திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...