(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச்சூர் அன்றறுத்த மைந்தன் தாதை தன்
மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே
(2)
பூவார் சடையின் முடிமேல் புனலர், அனல் கொள்வர்
நாவார் மறையர், பிறையர், நறவெண் தலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்பு எரிவாங்கி
மேவார் புர மூன்றெரித்தார் மீயச்சூராரே
(3)
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத்
தன்னேர் பிறரில்லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகமெய்தற்கரிதன்றே
(4)
வேக மதநல்லி யானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோடாகப் படிதம் பலபாட
நாகம் அரைமேலசைத்து நடமாடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச்சூரானே
(5)
விடையார் கொடியார், சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதம் சூழப் பாடல் ஆடலார்
பெடையார் வரிவண்டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்றுடையார் மீயச்சூராரே
(6)
குளிரும் சடைகொள் முடிமேல் கோலமார் கொன்றை
ஒளிரும் பிறையொன்றுடையான், ஒருவன், கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டநவில் நம்பன்
மிளிரும் அரவமுடையான் மீயச்சூரானே
(7)
நீல வடிவர், மிடறு நெடியர், நிகரில்லார்
கோல வடிவு தமதாம், கொள்கை அறிவொண்ணார்
காலர் கழலர், கரியின் உரியர், மழுவாளர்
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே
(8)
புலியின் உரிதோலாடை, பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேல் கரந்தார், உமைஅஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர்கோன் தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே
(9)
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்
போதிலவனும் மாலும் தொழப் பொங்கெரி ஆனார்
கோதி வரிவண்டறை பூம்பொய்கைப் புனல் மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச்சூராரே
(10)
கண்டார் நாணும் படியார், கலிங்கமுடை பட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகமுடையார், பெரிய வரைவில்லா
விண்டார் புர மூன்றெரித்தார் மீயச்சூராரே
(11)
வேடமுடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன்
பாடலாய தமிழ் ஈரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல் வானுலகம் அடைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...