(1)
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டுமை
நீறு சேர் திருமேனியர்
சேறுசேர் வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறிலா மணிகண்டரே
(2)
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவாராம் அடிகள் என
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே உமை உள்கியே
(3)
பையாரும் அரவங்கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற்றிருக்கின்ற
ஐயா நின் அடியார்களே
(4)
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலமார் கண்ட நின்னையே
(5)
மாறிலா மணியே என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே குலவும் திருமாற்பேற்றின்
நீறனே என்று நின்னையே
(6)
உரையாதாரில்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவாதாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்று
அரையானே அருள் நல்கிடே
(7)
…
(8)
அரசளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்தவன் ஒல்கிட
வரமிகுத்த எம் மாற்பேற்றடிகளைப்
பரவிடக் கெடும் பாவமே
(9)
இருவர் தேவரும் தேடித் திரிந்தினி
ஒருவரால் அறிவொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற்றடிகளைப்
பரவுவார் வினை பாறுமே
(10)
தூசு போர்த்துழல்வார், கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈசன் என்றெடுத்தேத்துமே
(11)
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற்றடிகளை
மன்னு காழியுண் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே வினை பாறுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...