திருமாற்பேறு – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருமாற்பேறு

(1)
குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே
(2)
பாறணி வெண்தலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந்துமையொரு பாகம் வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே
(3)
கருவுடையார் உலகங்கள் வேவச்
செருவிடை ஏறியும் சென்று நின்று
உருவிடையாள் உமையாளும் தானும்
மருவிய வளநகர் மாற்பேறே
(4)
தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலை நவின்றான் கயிலாயம் என்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே
(5)
துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர் பாகன்
கறையணி மிடற்றண்ணல், காலற் செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே
(6)
பெண்ணின் நல்லாளைஒர் பாகம்வைத்துக்
கண்ணினால் காமனைக் காய்ந்தவன் தன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே
(7)
(8)
தீதிலா மலையெடுத்த அரக்கன்
நீதியால் வேதகீதங்கள் பாட
ஆதியானாகிய அண்ணல் எங்கள்
ஆதிதன் வளநகர் மாற்பேறே
(9)
செய்ய தண்தாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயனன் சேவடி அதனை உள்க
மையல் செய் வளநகர் மாற்பேறே
(10)
குளித்துணா அமணர் குண்டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுறார்
முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே
(11)
அந்தமில் ஞானசம்பந்தன் சொன்ன
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமில் தமிழ்கள் கொண்டேத்த வல்லார்
எந்தை தன் கழலடி எய்துவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page