திருமாற்பேறு – அப்பர் தேவாரம் (2):

<– திருமாற்பேறு

(1)
பொருமாற்றின் படை வேண்டி நற்பூம்புனல்
வருமாற்றின் மலர் கொண்டு வழிபடும்
கருமாற்கின்னருள் செய்தவன், காண்தகு
திருமாற்பேறு தொழ வினை தேயுமே
(2)
ஆலத்தார் நிழலில் அற நால்வர்க்குக்
கோலத்தால் உரை செய்தவன், குற்றமில்
மாலுக்காரருள் செய்தவன், மாற்பேறு
ஏலத்தால் தொழுவார்க்கிடரில்லையே
(3)
துணிவண்ணச் சுடராழி கொள்வான் எண்ணி
அணிவண்ணத்தலர் கொண்டடி அர்ச்சித்த
மணிவண்ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண்ணத்தவர்க்கில்லையாம் பாவமே
(4)
தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாதவர் பயில் மாற்பேறு கைதொழப்
போதுமின் வினையாயின போகுமே
(5)
வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முரசம் மறை அவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு !கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுலகத்திலே
(6)
பண்டை வல்வினை பற்றறுக்கும் வகை
உண்டு சொல்லுவன் கேண்மின், ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ் திருமாற்பேறு
கண்டு கைதொழத் தீரும் கவலையே
(7)
மழுவலான் திருநாமம் மகிழ்ந்துரைத்து
அழ வலார்களுக்கன்பு செய்து இன்பொடும்
வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு
தொழவலார் தமக்கில்லை துயரமே
(8)
முன்னவன், உலகுக்கு முழுமணிப்
பொன்னவன், திகழ்முத்தொடு போகமாம்
மன்னவன், திருமாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆளுடையார்களே
(9)
வேடனாய் விசயன்னொடும் !எய்துவெங்
காடு நீடுகந்தாடிய கண்ணுதல்
மாட நீடுயரும் திருமாற்பேறு
பாடுவார் பெறுவார் பரலோகமே
(10)
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத்
தருக்கினால் எடுத்தானைத் தகரவே
வருத்தி ஆரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தியால் தொழுவார்க்கில்லை அல்லலே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page