<– சோழ நாடு (காவிரி வடகரை)
(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
செம்பொனார் தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி, செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான், இமையோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே
(2)
விளவு தேனொடு சாதியின் பலங்களும், வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுடவிழித்தவன், நெற்றி
அளக வாள்நுதல் அரிவைதன் பங்கனைஅன்றி மற்றறியோமே
(3)
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும், கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறைஉறை நம்பன்
வாடினார் தலையில் பலிகொள்பவன், வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடிலா மணியைத் தொழல்அல்லது கெழுமுதல் அறியோமே
(4)
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த
மலையை, வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே
(5)
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைப்
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்குவார்அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே
(6)
பெருகு சந்தனம் காரகில் பீலியும், பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே
(7)
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மலர் அவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறைஇறை, அன்றங்கு
அறவனாகிய கூற்றினைச் சாடிய அந்தணன், வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்து எயிலெய்தவன் நிரைகழல் பணிவோமே
(8)
மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள், மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
நிந்தியா எடுத்தார்த்த வல்லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தியா மனத்தார்அவர் சேர்வது தீநெறி அதுதானே
(9)
நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடியிணை நாளும்
கோலமேத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே
(10)
நின்றுணும் சமண் தேரரும் நிலையிலர், நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒருகாலம்
அன்றி உள்ளழிந்தெழும் பரிசழகிது அதுஅவர்க்கிடமாமே
(11)
வரை வளங்கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானைச்
சிரபுரம் பதியுடையவன் கவுணியன், செழுமறை நிறைநாவன்
அரவெனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறுமாலை
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...