திருமழபாடி – சுந்தரர் தேவாரம்:

<– திருமழபாடி

(1)
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே, மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(2)
கீளார் கோவணமும், திருநீறுமெய் பூசிஉந்தன்
தாளே வந்தடைந்தேன், தலைவா எனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா, நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
(3)
எம்மான் எம்மனை எந்தனுக்கெள்தனைச் சார்வாகார்
இம்மாயப் பிறவி பிறந்தேஇறந்து எய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(4)
பண்டே நின்னடியேன் அடியார் அடியார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன், தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(5)
கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(6)
நாளார் வந்தணுகி நலியாமுனம் நிந்தனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னைஅல்லால் இனியாரை நினைக்கேனே
(7)
சந்தாரும் குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
(8)
வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம்
செய்ய மலர்களிடம் மிகு செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே
(9)
நெறியே நின்மலனே, நெடுமாலயன் போற்றிசெய்யும்
குறியே, நீர்மையனே, கொடியேர் இடையாள் தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
(10)
ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page