(1)
காலையார் வண்டினம் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழபாடியே
(2)
கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழபாடியே
(3)
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல் விரலாளொடு பயில்விடம்
மந்தம் வந்துலவு சீர் மாமழபாடியே
(4)
அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே
(5)
கங்கையார் சடையிடைக் கதிர்மதி அணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன், தீதிலாச்
செங்கயல் கண்ணுமையாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழபாடியே
(6)
பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழபாடியே
(7)
விண்ணிலார் இமையவர் மெய்ம் மகிழ்ந்தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே
(8)
கரத்தினால் கயிலையை எடுத்த காரரக்கன்
சிரத்தினை ஊன்றலும் சிவனடி சரண்எனா
இரத்தினால் கைந்நரம்பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழபாடியே
(9)
ஏடுலா மலர்மிசை அயன், எழில் மாலுமாய்
நாடினார்க்கரிய சீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழபாடியே
(10)
உறிபிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்தறிவிலா நீசர்சொல் கொள்ளன்மின்
பொறி பிடித்தரவினம் பூணெனக் கொண்டு ,மான்
மறி பிடித்தான்இடம் மாமழபாடியே
(11)
ஞாலத்தார் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழபாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றமற்றார்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...