திருமழபாடி – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருமழபாடி 

(1)
அங்கையார் அழலன்; அழகார் சடைக்
கங்கையான்; கடவுள்; இட மேவிய
மங்கையான் உறையும் மழபாடியைத்
தங்கையால் தொழுவார் தகவாளரே
(2)
விதியுமாம் விளைவாம், ஒளிஆர்ந்ததோர்
கதியுமாம் கசிவாம், வசியாற்றமா
மதியுமாம், வலியா மழபாடியுள்
நதியந்தோய் சடை நாதன் நற்பாதமே
(3)
முழவினான், முதுகாடுறை பேய்க்கணக்
குழுவினான், குலவும் கையிலேந்திய
மழுவினான் உறையும் மழபாடியைத்
தொழுமின் உம் துயரானவை தீரவே
(4)
கலையினான் மறையான், கதியாகிய
மலையினான், மருவார் புர மூன்றெய்த
சிலையினான் சேர் திருமழபாடியைத்
தலையினால் வணங்கத் தவமாகுமே
(5)
நல்வினைப் பயன், நான்மறையின் பொருள்
கல்வியாய கருத்தன், உருத்திரன்
செல்வன் மேய திருமழபாடியைப்
புல்கியேத்தும் அது புகழாகுமே
(6)
நீடினார் உலகுக்குயிராய் நின்றான்
ஆடினான் எரி கானிடை மாநடம்
பாடினார் இசை மாமழபாடியை
நாடினார்க்கில்லை நல்குரவானவே
(7)
மின்னினார் இடையாளொரு பாகமாய்
மன்னினான் உறை மாமழபாடியைப்
பன்னினார் இசையால் வழிபாடுசெய்
துன்னினார் வினையாயின ஓயுமே
(8)
தென்இலங்கையர் மன்னன் செழுவரை
தன்னிலங்க அடர்த்தருள் செய்தவன்
மன்னிலங்கிய மாமழபாடியை
உன்னிலங்க உறுபிணி இல்லையே
(9)
திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும் தொழத் தழல் மாண்பமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப் பற்றறுப்பார்களே
(10)
நலியும் நன்றறியாச் சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழபாடியுள்
ஒலிசெய்வார் கழலான் திறம்உள்கவே
மெலியும் நம்முடன் மேல் வினையானவே
(11)
மந்த முந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந்தேத்துவான்
கந்தமார் கடல் காழியுண் !ஞானசம்
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை பாவமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page