திருமழபாடி – அப்பர் தேவாரம் (1):

<– திருமழபாடி 

(1)
நீறேறு திருமேனி உடையான் கண்டாய்
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகம் கொண்டான் கண்டாய்
    கொடியவிடம் உண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி எங்கும் திரிவான் கண்டாய்
    ஏழுலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(2)
கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்
    கொல்லை விடையேறும் கூத்தன் கண்டாய்
அக்கரைமேல் ஆடல் உடையான் கண்டாய்
    அனலங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடரவம் அணிந்தான் கண்டாய்
    அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(3)
நெற்றித் தனிக்கண் உடையான் கண்டாய்
    நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப் பாம்பாட்டும் படிறன் கண்டாய்
    பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றும் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்றம் இலாதான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(4)
அலையார்ந்த புனல்கங்கைச் சடையான் கண்டாய்
    அண்டத்துக்கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றம் குமைத்தான் கண்டாய்
    கொல்வேங்கைத் தோலொன்றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(5)
உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
    உவகையோடு இன்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்
    நால்வேதம் ஆறங்கம் ஆனான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
    உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னு மணாளன் தானே
(6)
தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
    தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
    புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலை ஒன்றேந்தி கண்டாய்
    இருளார்ந்த கண்டத்திறைவன் கண்டாய்
மாமருவும் கலை கையிலேந்தி கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(7)
நீராகி நெடுவரைகள் ஆனான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பும் ஆனான் கண்டாய்
பாராகிப் பௌவம் ஏழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனும் தன்னடியார்க்கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(8)
பொன்னியலும் திருமேனி உடையான் கண்டாய்
    பூங்கொன்றைத் தாரொன்றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
    வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவர் இல்லான் கண்டாய்
    தாங்கரிய சிவம்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(9)
ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
    அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
    கண்ணப்பர்க்கருள் செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
    பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே
(10)
ஒருசுடராய் உலகேழும் ஆனான் கண்டாய்
    ஓங்காரத்துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
    விழவொலியும் வேள்வொலியும் ஆனான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
    ஈடழிய இருபதுதோள் இறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் தானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page