திருமழபாடி – அப்பர் தேவாரம் (2):

<– திருமழபாடி

(1)
அலையடுத்த பெருங்கடல் நஞ்சமுதா உண்டு
    அமரர்கள்தம் தலைகாத்த ஐயர், செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
    திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
    நிரைவயிரப் பலகையால் குவைஆர்த்துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(2)
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
    அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
    வழிபட்டார் வானாளக் கொடுத்தியன்றே
கறைகலந்த பொழில்கச்சிக் கம்பம் மேய
    கனவயிரத் திரள்தூணே, கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(3)
உரங்கொடுக்கும் இருள்மெய்யர் மூர்க்கர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணர்தமை உறவாக் கொண்ட
பரங்கெடுத்திங்கு அடியேனை ஆண்டு கொண்ட
    பவளத்தின் திரள்தூணே, பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
    பொடியாக விழித்தருளிப் புவியோர்க்கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(4)
ஊனிகந்தூண் உறிக்கையர் குண்டர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணர் உறவாகக் கொண்டு
ஞானகஞ் சேர்ந்துள்ள வயிரத்தை நண்ணா
    நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியால் சூடும்
    வேந்தனே, விண்ணவர்தம் பெருமான், மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(5)
சிரமேற்ற நான்முகன்தன் தலையும் மற்றைத்
    திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச், சோமன்
    ஒளிர்கலைகள் படஉழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
    நம்பியையே மறைநான்கும் ஒலமிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத்தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(6)
சினந்திருத்தும் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
    செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
    பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்தும் அவர்திறத்தை ஒழியப் பாற்றித்
    தயாமூல தன்மவழி எனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே
(7)
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்கும்
    சுருள்சடைஎம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
    என்துணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
    பரிதியே சுருதி முடிக்கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நான்அரற்றி நைகின்றேனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page