திருமறைக்காடு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருமறைக்காடு

(1)
பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தம்
கங்குலார் இருள் போழும் கலி மறைக்காடமர்ந்தார் தாம்
திங்கள் சூடினரேனுந் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழலது இகழ்பழியிலரே
(2)
கூனிளம் பிறைசூடிக், கொடுவரித் தோலுடை ஆடை
ஆனிலங்கிளர் ஐந்தும்ஆடுவர், பூண்பதும் அரவம்
கானலங்கழி ஓதங் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேனலங்கமழ் சோலைத் திருமறைக்காடமர்ந்தாரே
(3)
நுண்ணிதாய் வெளிதாகி, நூல்கிடந்திலங்கு பொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி உமையொரு பாகன்
தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலி மறைக்காடமர்ந்தாரே
(4)
ஏழை வெண் குருகயலே இளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடமர்ந்தார் தாம்
மாழையங்கயல் ஒண்கண் மலைமகள் கணவனதடியின்
நீழலே சரணாக நினைபவர் வினை நலிவிலரே
(5)
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ, நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை மழலைவண்டு யாழ்செயும் மறைக்காட்டு
இரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெனலாமே
(6)
பல்லிலோடு கையேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியதறிவர்எம் அடிகள்
புல்லம் ஏறுவர், பூதம் புடைசெல உழிதர்வர்க்கிடமாம்
மல்கு வெண்திரை ஓத மாமறைக்காடது தானே
(7)
நாகந் தான் கயிறாக, நளிர்வரை அதற்கு மத்தாகப்
பாகம் தேவரொடசுரர் படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கும் ஓட
ஆகந்தன்னில் வைத்தமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே
(8)
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத்தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்தரக்கன்
பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே
(9)
விண்ட மாமலரோனும், விளங்கொளி அரவணையானும்
பண்டுங் காண்பரிதாய பரிசினன் அவனுறை பதிதான்
கண்டலங்கழி ஓதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்டலங்கமழ் சோலை மாமறைக்காடது தானே
(10)
பெரியவாகிய குடையும் பீலியும் அவைவெயில் கரவாக்
கரிய மண்டை கையேந்திக் கல்லென உழிதருங் கழுக்கள்
அரியவாக உண்டோதும் அவர்திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர்மறைக்காடே பேணுமின் மனமுடையீரே
(11)
மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாரைக்
கையினால் தொழுதெழுவான் காழியுண் ஞானசம்பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்ப்
பொய்யில் வானவரோடும் புகவலர், கொளவலர் புகழே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page