(1)
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளாமணி தான் கண்டாய்
காண்டற்கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய், விரதமெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(2)
கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய், திகழும் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய், பாசூரான் கண்டாய்
வைகிளரும் கூர்வாள் படையான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(3)
சிலந்திக்கருள் முன்னம் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ ஆனான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடை ஒன்றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(4)
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்
காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளியுழை மானின் தோலான் கண்டாய்
புலியுரிசேர்ஆடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறைமுடிமேல் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய், நம்செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(5)
மூரி முழங்கொலிநீர் ஆனான் கண்டாய்
முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்
அண்ணாமலையுறை எம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(6)
ஆடல்மால் யானை உரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய், குழகன் கண்டாய்
குளிர்ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்
நன்மையோடு இம்மை மற்றம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(7)
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி அழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத்தான் கண்டாய், பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(8)
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய், ஆக்கம் செய்திட்டு
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்
என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய், வினைகள் போக
மம்மர்அறுக்கும் மருந்து கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(9)
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்
ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பால விருத்தனும் ஆனான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
(10)
அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
சோதி விரலால்உற வைத்தான் கண்டாய்
பெயர்அவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும் படையோடீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...