திருமருகல் – அப்பர் தேவாரம்:

<– திருமருகல்

(1)
பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
(2)
பாடங்கொள் பனுவல் திறம் கற்றுப்போய்
நாடங்குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ்சூழ் மருகல் பெருமான்திரு
வேடம் கைதொழ வீடெளிதாகுமே
(3)
சினத்தினால் வரும் செய்தொழிலாம் அவை
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கில்லை நீள்நில வாழ்க்கையே
(4)
ஓது பைங்கிளிக்கு ஒண்பால் அமுதூட்டிப்
பாதுகாத்துப் பலபல கற்பித்து
மாதுதான் மருகல் பெருமானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே
(5)
இன்னவாறென்பது உண்டறியேன், நின்று
துன்னு கைவளை சோரக் கண்நீர் மல்கும்
மன்னுதென் மருகல் பெருமான் திறம்
உன்னி ஒண்கொடி உள்ளம் உருகுமே
(6)
சங்கு சோரக் கலையும் சரியவே
மங்கை தான் மருகல் பெருமான் வரும்
அங்க வீதி அருகணையா நிற்கும்
நங்கைமீர் இதற்கென் செய்கேன் நாளுமே
(7)
காட்சி பெற்றிலள் ஆகிலும் காதலே
மீட்சி ஒன்றறியாது மிகுவதே
மாட்சியார் மருகல் பெருமானுக்குத்
தாழ்ச்சி சால உண்டாகுமென் தையலே
(8)
நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும்
ஓடு மாலினோடு ஒண்கொடி மாதராள்
மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு நீயென்று கூடல் இழைக்குமே
(9)
கந்தவார் குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால் விடையோடும் அன்பாய்மிக
வந்திடாய் மருகல் பெருமானென்று
சிந்தை செய்து திகைத்திடும் காண்மினே
(10)
ஆதி மாமலை அன்றெடுத்தான் இற்றுச்
சோதி என்றலும் தொல்லருள் செய்திடும்
ஆதியான் மருகல் பெருமான் திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும்பரே

 

1 comment

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page