திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் – சம்பந்தர் தேவாரம்:

<– திருமருகல்

(1)
அங்கமும் வேதமும் ஓதும்நாவர், அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயலார் புனல் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காமுறவே
(2)
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூல்மறையாளர் ஏத்த
மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செய்தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கைதவழ் கூரெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காமுறவே
(3)
தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர், தொகு மறையோர்கள் வளர்த்த செந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி, மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால்புல்கு பைங்கழல் ஆர்க்கஆடும் கணபதியீச்சரம் காமுறவே
(4)
நாமரு கேள்வியர் வேள்விஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய
மாமருவும் மணிக்கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
தேமரு பூம்பொழில் சோலைசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லியாடும் கணபதியீச்சரம் காமுறவே
(5)
பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறையோர் அவர்தாம் பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடகமே இடமாக ஆடும் கணபதியீச்சரம் காமுறவே
(6)
புனை அழலோம்புகை அந்தணாளர் பொன்னடி நாள்தொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காமுறவே
(7)
(8)
பூண்தங்கு மார்பினில் இங்கைவேந்தன் பொன்னெடுந்தோள் வரையால் அடர்த்து
மாண்தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண்தங்கு தோள் பெயர்த்தெல்லியாடும் கணபதியீச்சரம் காமுறவே
(9)
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணையானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓதுநாவர், மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவியேத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில்புகையே கமழும் கணபதியீச்சரம் காமுறவே
(10)
இலைமருதே அழகாக நாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத் தின்னும்
நிலையமண் தேரரை நீங்கிநின்று, நீதரல்லார் தொழு மாமருகல்
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய், மாசில் செங்காட்டங்குடி அதனுள்
கலைமல்கு தோலுடுத்தெல்லியாடும் கணபதியீச்சரம் காமுறவே
(11)
நாலும் குலைக் கமுகோங்கு காழி ஞானசம்பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும் மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம்வல்லான் கழலேத்து பாடல் சொல்ல வல்லார் வினையில்லையாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page