திருமணஞ்சேரி – அப்பர் தேவாரம்:

<– திருமணஞ்சேரி

(1)
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாள்தொறும்
சிட்டர்வாழ் திருவார் மணஞ்சேரிஎம்
வட்டவார் சடையார் வண்ணம் வாழ்த்துமே
(2)
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார்சடை மேல்பிறை வைத்தவர்
மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினையாயின ஓயுமே
(3)
புற்றில் ஆடரவாட்டும் புனிதனார்
தெற்றினார் புரம் தீயெழச் செற்றவர்
சுற்றினார் மதில்சூழ் மணஞ்சேரியார்
பற்றினாரவர் பற்றவர் காண்மினே
(4)
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை
முத்தர், முக்கணர், மூசரவம் அணி
சித்தர், தீவணர், சீர் மணஞ்சேரிஎம்
வித்தர், தாம் விருப்பாரை விருப்பரே
(5)
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடைமேலவர்
அள்ளலார் வயல்சூழ் மணஞ்சேரிஎம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே
(6)
நீர்பரந்த நிமிர்புன் சடையின் மேல்
ஊர்பரந்த உரகம் அணிபவர்
சீர்பரந்த திருமணஞ்சேரியார்
ஏர் பரந்தங்கிலங்கு சூலத்தரே
(7)
சுண்ணத்தர் சுடு நீறுகந்தாடலார்
விண்ணத்தம் மதி சூடிய வேதியர்
மண்ணத்தம் முழவார் மணஞ்சேரியார்
வண்ணத்தம் முலையாள் உமை வண்ணரே
(8)
துன்ன ஆடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடைமேல் பிறை வைத்தவர்
மன்னுவார் பொழில் சூழ் மணஞ்சேரிஎம்
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே
(9)
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேரமண் கையர் புகழவே
மத்தர் தாம்அறியார் மணஞ்சேரிஎம்
அத்தனார் அடியார்க்கல்லல் இல்லையே
(10)
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்தவன் நெடுநீள்முடி பத்திறப்
படுத்தலும், மணஞ்சேரிஅருள் எனக்
கொடுத்தனன் கொற்ற வாளொடு நாமமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page