திருப்பைஞ்ஞீலி – சுந்தரர் தேவாரம்:

<– திருப்பைஞ்ஞீலி

(1)
காருலாவிய நஞ்சை உண்டிருள் கண்டர்; வெண்தலைஓடு கொண்டு
ஊரெலாம் திரிந்தென் செய்வீர், பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்தும்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே
(2)
சிலைத்து நோக்கும் வெள்ளேறு, செந்தழல்வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது, நுங்கையில் பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
(3)
தூயவர் கண்ணும் வாயும் மேனியும், துன்ன ஆடை, சுடலையில்
பேயொடு ஆடலைத் தவிரும், நீரொரு பித்தரோ எம்பிரானிரே
பாயும் நீர்க்கு இடங்கார் கமலமும் பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
(4)
செந்தமிழ்த் திறம் வல்லிரோ, செங்கண் அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்கும் இதென்கொலோ, பலி மாற்ற மாட்டோம் இடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்தநாறு பைஞ்ஞீலியீர்
அந்தி வானமும் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே
(5)
நீறு நும் திருமேனி நித்திலம் நீல்நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம், பலி நடமினோ
பாறு வெண்தலை கையிலேந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள்நீர்
ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே
(6)
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழிலாகிநீர்
இரவும் இம்மனை அறிதிரே, இங்கே நடந்து போகவும் வல்லிரே
பரவி நாள்தொறும் பாடுவார் வினை பற்றறுக்கும் பைஞ்ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
(7)
ஏடுலா மலர்க் கொன்றை சூடுதிர், என்பெலாம் அணிந்தென் செய்வீர்
காடு நும்பதி, ஓடு கையது, காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
(8)
மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
மொய்த்த வெண்தலை கொக்கிறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடியாடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே
(9)
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்கரை குட முழவினோடு இசைகூடிப் பாடி நின்றாடுவீர்
பக்கமே குயில்பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே
(10)
கையொர் பாம்பு, அரை ஆர்த்தொர் பாம்பு, கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம் பொடிக் கொண்டு பூசுதிர், வேதம் ஓதுதிர் கீதமும்
பையவே விடங்காக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள்நீர்
ஐயம் ஏற்கும் இதென்கொலோ சொலும் ஆரணீய விடங்கரே
(11)
அன்னஞ்சேர் வயல்சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்தசொல்
மன்னு தொல்புகழ் நாவலூரன் வன்தொண்டன் வாய்மொழி பாடல்பத்து
உன்னி இன்னிசை பாடுவார் உமைகேள்வன் சேவடி சேர்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page