(1)
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடம் குறைவிலர், உடையர் கோவணம்
நீரிடம் சடை, விடையூர்தி, நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில் பைஞ்ஞீலியே
(2)
மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளம்கொளா தவத்
திருவிலார் அவர்களைத் தெருட்டலாகுமே
(3)
அஞ்சுரும் பணிமலர் அமுத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெஞ்சுரம்தனில் உமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே
(4)
கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை உகந்தஎம் அடிகள் அல்லரே
(5)
விழியிலா நகுதலை விளங்கிளம் பிறை
சுழியிலார் வருபுனல் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்கலாகுமே
(6)
விடையுடைக் கொடி, வலன்ஏந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவலான்
துடியிடைக் கலைஅல்குலாள் ஓர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே
(7)
தூயவன்; தூய வெண்ணீறு மேனிமேல்
பாயவன்; பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய்புரை தோளி பாகமா
ஏயவன்; எனைச் செயும் தன்மை என்கொலோ
(8)
தொத்தின தோள்முடி உடையவன் தலை
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்
முத்தினை முறுவல் செய்தாள்ஓர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே
(9)
நீருடைப் போதுறைவானும், மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையம் தலைவர் தன்மையே
(10)
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்
சாலியாதவர்களைச் சாதியாததோர்
கோலியா அருவரை கூட்டி யெய்த !பைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே
(11)
கண்புனல் விளைவயல் காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...