திருப்பூவணம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருப்பூவணம்

(1)
மாதமர் மேனியனாகி, வண்டொடு
போதமர் பொழிலணி பூவணத்துறை
வேதனை, விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மையாகுமே
(2)
வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில் திருப்பூவணத்துறை
ஆனநல் அருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மையாகுமே
(3)
வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவணத்துறை
அந்திவெண் பிறையினோடு ஆறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மையாகுமே
(4)
வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவணத்துறை
ஈசனை மலர் புனைந்தேத்துவார் வினை
நாசனை அடிதொழ நன்மையாகுமே
(5)
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில் திருப்பூவணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றெய்த
பெருந்தகை அடிதொழப் பீடை இல்லையே
(6)
வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர  அணிபொழில்  பூவணத்துறை
கிறிபடும் உடையினன், கேடில் கொள்கையன்
நறுமலர் அடிதொழ நன்மையாகுமே
(7)
பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி பூவணத்துறை
மறைமல்கு பாடலன், மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே
(8)
வரைதனை எடுத்த வல்லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவணந்தனைப்
பரவிய அடியவர்க்கில்லை பாவமே
(9)
நீர்மல்கு மலர்உறைவானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேரகிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர் புனைந்தேத்தல் இன்பமே
(10)
மண்டை கொண்டு உழிதரு மதியில் தேரரும்
குண்டரும் குணமல பேசும் கோலத்தர்
வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடிதொழுதேத்தல் கன்மமே
(11)
புண்ணியர் தொழுதெழு பூவணத்துறை
அண்ணலை அடி தொழுதந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page