திருப்பூவணம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருப்பூவணம்

(1)
அறையார் புனலும் மாமலரும் ஆடரவார் சடைமேல்
குறையார் மதியும் சூடி, மாதோர் கூறுடையான் இடமாம்
முறையார் முடிசேர் தென்னர், சேரர் சோழர்கள் தாம்வணங்கும்
திறையார் ஒளிசேர் செம்மையோங்கும் தென்திருப்பூவணமே
(2)
மருவார் மதில் மூன்றொன்ன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகமாகச் செய்த உம்பர் பிரானவன் ஊர்
கருவார் சாலிஆலை மல்கிக் கழல்மன்னர் காத்தளித்த
திருவால் மலிந்த சேடர்வாழும் தென் திருப்பூவணமே
(3)
போரார் மதமா உரிவை போர்த்துப், பொடியணி மேனியனாய்க்
காரார் கடலின் நஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவன் ஊர்
பாரார் வைகைப்புனல் வாய் பரப்பிப், பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென் திருப்பூவணமே
(4)
கடியார் அலங்கல் கொன்றைசூடிக் காதிலொர் வார்குழையன்
கொடியார் வெள்ளை ஏறுகந்த கோவணவன் இடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழால் பரவச்
செடியார் வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே
(5)
கூரார் வாளி சிலையில் கோத்துக் கொடிமதில் கூட்டழித்த
போரார் வில்லி, மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடமாம்
ஆராஅன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடும் தென் திருப்பூவணமே
(6)
நன்று தீதென்றொன்றிலாத நான்மறையோன் கழலே
சென்றுபேணி ஏத்தநின்ற தேவர்பிரான் இடமாம்
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாரும் தென்திருப்பூவணமே
(7)
பைவாய் அரவம் அரையில் சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய் மேனி நீறுபூசி ஏறுகந்தான் இடமாம்
கைவாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல்ஓவாத் தென் திருப்பூவணமே
(8)
மாடவீதி மன்இலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூட வென்றிவாள் கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடு மாடலோங்கிப் பன்மணி பொன் கொழித்து
ஓடிநீரால் வைகைசூழும் உயர் திருப்பூவணமே
(9)
பொய்யா வேத நாவினானும், பூமகள் காதலனும்
கையால் தொழுது கழல்கள் போற்றக் கனலெரியானவன் ஊர்
மையார் பொழிலின் வண்டுபாட, வைகை மணிகொழித்துச்
செய்யார் கமலம் தேனரும்பும் தென் திருப்பூவணமே
(10)
அலையார் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடமாம்
மலைபோல் துன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே
சிலையார் புரிசை பரிசுபண்ணும் தென் திருப்பூவணமே
(11)
திண்ணார் புரிசை மாடமோங்கும் தென் திருப்பூவணத்துப்
பெண்ணார்மேனி எம்இறையைப் பேரியல் இன்தமிழால்
நண்ணார் உட்கக் காழிமல்கு ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணார் பாடல்பத்தும் வல்லார் பயில்வது வானிடையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page