(1)
வடியேறு திரிசூலம் தோன்றும்தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(2)
ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட்காரமுதமாகித் தோன்றும்
ஊணாகி ஊர் திரிவானாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும், பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்
செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(3)
கல்லாலின் நீழல் கலந்து தோன்றும்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்
சூழரவும் மான்மறியும் தோன்றும் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலால்எலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(4)
படைமலிந்த மழுவாளும் மானும் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியும் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனம் தோன்றும்
உடைமலிந்த கோவணமும் கீளும் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(5)
மயலாகும் தன்னடியார்க்கருளும் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டிருண்ட கண்டம் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(6)
பாராழி வட்டத்தார் பரவியிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்கள் அன்ன
திருந்தியமா நிறத்த சேவடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவம் கெடுப்பித்தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(7)
தன்னடியார்க்கருள்புரிந்த தகவு தோன்றும்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகம் தோன்றும்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(8)
செறிகழலும் திருவடியும் தோன்றும்தோன்றும்
திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும்
மறுபிறவி அறுத்தருளும் வகையும் தோன்றும்
மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(9)
அருப்போட்டு முலைமடவாள் பாகம் தோன்றும்
அணிகிளரும் உருமென்ன அடர்க்கும் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடம் தோன்றும், மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும்
செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமும் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(10)
ஆங்கணைந்த சண்டிக்கும் அருளியன்று
தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணி செய்வார்க்கருளியன்று
பலபிறவி அறுத்தருளும் பரிசும் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மத மத்தம்மும்
குழற்கணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்
பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
(11)
ஆருருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்
வாருருவப் பூண்முலை நன்மங்கை தன்னை
மகிழ்ந்தொரு பால் வைத்துகந்த வடிவம் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையும் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...