காலபாசத் திருக்குறுந்தொகை:
(1)
கண்டு கொள்ள அரியானைக், கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் !கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே
(2)
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப் பெறீர் இங்கு நீங்குமே
(3)
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமம் சிவனென்று அரற்றுவார்
ஆர்களாகிலும் ஆக அவர்களை
நீர்கள் சாரப் பெறீர் இங்கு நீங்குமே
(4)
சாற்றினேன் சடைநீள்முடிச் சங்கரன்
சீற்றம் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி என்றுரைப்பார் புடை போகலே
(5)
இறைஎன் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப் பெருமான்தமர்
நறவம் நாறிய நல்நறும் சாந்திலும்
நிறைய நீறணிவார் எதிர் செல்லலே
(6)
வாம தேவன் வளநகர் வைகலும்
காமம் ஒன்றிலராய்க் கைவிளக்கொடு
தாமம் தூபமும் தண்நறும் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே
(7)
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசனடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே
(8)
விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும்
நிச்சல் நீறணிவாரை நினைப்பதே
அச்சமெய்தி அருகணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே
(9)
இன்னம் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத்தாகிய மந்திரம்
தன்னில் ஒன்றுவல்லாரையும் சாரலே
(10)
மற்றும் கேண்மின் மனப்பரிப்பு ஒன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை ஏறுடையான் அடியே அலால்
பற்றொன்றில்லிகள் மேற்படை போகலே
(11)
அரக்கன் ஈரைந்தலையும்ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கள், மற்றுநீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...