திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (8) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

தனித் திருக்குறுந்தொகை:

(1)
ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்றங்கு உறையும் ஒருவனே
(2)
இரண்டுமாம் அவர்க்குள்ளன செய்தொழில்
இரண்டுமாம் அவர்க்குள்ளன கோலங்கள்
இரண்டும்இல் இளமான்; எமை ஆளுகந்து
இரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே
(3)
மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்
மூன்றுமாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே
(4)
நாலின் மேல்முகம் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந்து இட்டதும் இன்பமாம்
நாலு வேதம் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே
(5)
அஞ்சும் அஞ்சுமோர் ஆடி, அரைமிசை
அஞ்சு போல்அரை ஆர்த்ததின் தத்துவம்
அஞ்சும் அஞ்சுமோர் ஓரஞ்சும்ஆயவன்
அஞ்சுமாம் எம் அகத்துறை ஆதியே
(6)
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க்கு அச்சமயப் பொருள்
ஆறு போலெம் அகத்துறை ஆதியே
(7)
ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றும் இராவணன் கைந்நரம்பு
ஏழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழும் சூழ்அடியேன் மனத்துள்ளவே
(8)
எட்டு மூர்த்தியாய் நின்றியலும் தொழில்
எட்டு வான்குணத்து ஈசன் எம்மான் தனை
எட்டு மூர்த்தியும் எம்இறை எம்முளே
எட்டு மூர்த்தியும் எம்முள் ஒடுங்குமே
(9)
ஒன்பதொன்பது யானை ஒளிகளிறு
ஒன்பதொன்பது பல்கணம் சூழவே
ஒன்பதாம் அவை தீத்தொழிலின் உரை
ஒன்பதொத்து நின்று என்னுள் ஒடுங்குமே
(10)
பத்து நூறவன் வெங்கண் வெள்ளேற்று அண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோள்மிசை
பத்தியாம் இலமாதலின் ஞானத்தால்
பத்தியான் இடம்கொண்டது பள்ளியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page