அடைவுத் திருத்தாண்டகம்:
(1)
பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன்றெய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான், பொற்!சக்
கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள்ளார்
கமழ்கொல்லி அறைப்பள்ளி, கலவஞ் சாரல்
சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி
செழு நனிபள்ளி, தவப்பள்ளி, சீரார்
பரப்பள்ளி என்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகதினிதாகப் பாலிப்பாரே
(2)
காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம், காமருசீர் அதிகை
மேவிய வீரட்டானம், வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம், விடையூர்திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன் தமரென்றகல்வர் நன்கே
(3)
நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் !செம்பங்
குடி, நல்லக்குடி, நளி நாட்டியத்தான்குடி
கற்குடி, தென் களக்குடி, செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி, கடையக்குடி, காணுங்கால்
விற்குடி, வேள்விக்குடி, நல் வேட்டக்குடி
வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி
புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே
(4)
பிறையூருஞ் சடைமுடிஎம் பெருமான் ஆரூர்
பெரும்பற்றப் புலியூரும், பேராவூரும்
நறையூரும், நல்லூரும், நல்லாற்றூரும்
நாலூரும், சேற்றூரும், நாரையூரும்
உறையூரும், ஓத்தூரும், ஊற்றத்தூரும்
அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூரும்
துறையூரும், துவையூருந் தோழூர் தானும்
துடையூருந் தொழஇடர்கள் தொடராவன்றே
(5)
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடெட்டும், மற்றும்
கரக்கோயில், கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
(6)
மலையார்தம் மகளொடு மாதேவன் சேரும்
மறைக்காடு, வண்பொழில்சூழ் தலைச்சங்காடு
தலையாலங்காடு, தடங்கடல் சூழந்தண்
சாய்க்காடு, தள்ளுபுனல் கொள்ளிக்காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங்காடு
பனங்காடு, பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடைய வினை வேறாம்அன்றே
(7)
கடுவாயர் தமைநீக்கி என்னை ஆட்கொள்
கண்ணுதலோன் நண்ணும்இடம் அண்ணல்வாயில்
நெடுவாயில், நிறைவயல்சூழ் நெய்தல்வாயில்
நிகழ் முல்லைவாயிலொடு, ஞாழல்வாயில்
மடுவார்தென் மதுரைநகர் ஆலவாயில்
மறிகடல்சூழ் புனவாயில், மாட நீடு
குடவாயில், குணவாயில் ஆனவெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடாவன்றே
(8)
நாடகமாடி இடம் நந்திகேச்சுர, !மாகாளேச்
சுர, நாகேச்சுர, நாகளேச்சுர, நன்கான
கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம், அக்கீச்சுரங் கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுர
மத்தீச்சுரம், சித்தீச்சுரம் அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்றேத்தி
இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே
(9)
கந்தமாதனங் கயிலை மலை, கேதாரம்
காளத்தி, கழுக்குன்றம், கண்ணார், அண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திர மாமலை, நீலம், ஏமகூடம்
விந்தமா மலை, வேதஞ் சையம் மிக்க
வியன் பொதியின்மலை, மேரு, உதயம், அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெட நின்றேத்துவோமே
(10)
நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவையாறும்
தெள்ளாறும், வளைகுளமும், தளிக்குளமும், நல்
இடைக்குளமும், திருக்குளத்தோடஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா
கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளங்களங்கா என அனைத்தும் கூறுவோமே
(11)
கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்கள்உரம் நெரியக்கால் விரலால் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை, தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை, வெண்டுறை, பைம்பொழில்
குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை
பெருந்துறையும், குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை, கடம்பந்துறை, !ஆவடு
துறை மற்றும் துறையனைத்தும் வணங்குவோமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
