பல்வகைத் திருத்தாண்டகம்:
(1)
நேர்ந்தொருத்தி ஒரு பாகத்தடங்கக் கண்டு
நிலைதளர ஆயிரமா முகத்தினோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேல் பயிலக் கண்டு
படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்
தனித்தொரு தண்டூன்றி மெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில்
பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே
(2)
ஐத்தானத்தகமிடறு சுற்றியாங்கே
அகத்தடைந்தால் யாதொன்றும் இடுவாரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்களோடு
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத்தொண் மதியும் பாம்பும் நீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்கலாமே
(3)
பொய்ஆறாவாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரணம் உடையோம் என்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீலகண்டர்
நிமிர்புன் சடை நெற்றிக்கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீராகில்
அல்லல் தீர்ந்தமருலகம் ஆளலாமே
(4)
இழவொன்று தாம் ஒருவர்க்கிட்டொன்றீயார்
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழல்நம் கோவையாதல் கண்டும் தேறார்
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழல்நம்மை நீக்குவிக்கும் அரையனாக்கும்
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்றலாமே
(5)
ஊற்றுத்துறை ஒன்பதுள் நின்றோரீர்
ஒக்க அடைக்கும் போதுணர மாட்டீர்
மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம்
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேரலாமே
(6)
கலஞ்சுழிக்கும் கருங்கடல்சூழ் வையம் தன்னில்
கள்ளக் கடலில் அழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
நம்பன்தன் அடியிணைக்கே நவில்வாயாகில்
அலஞ்சுழிக்கும் மன்னாகம் தன்னான் மேய
அருமறையோடோறங்கம் ஆனார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்
வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே
(7)
தண்டி குண்டோதரன் பிங்கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும்
பாரை அளந்தான் பல்லாண்டிசைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகண் பூதம்
சிலபாடச் செங்கண் விடைஒன்றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீராகில்
கடுகநும் வல்வினையைக் கழற்றலாமே
(8)
விடமூக்கப் பாம்பே போல் சிந்தி நெஞ்சே
வெள்ளேற்றான் தன் தமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
மாதவத்தார் மனத்துள்ளார் மழுவாள் செல்வர்
படமூக்கப் பாம்பணையில் பள்ளியானும்
பங்கயத்து மேலயனும் பரவிக் காணாக்
குடமூக்கே குடமூக்கே என்பீராகில்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே
(9)
தண்காட்டச் சந்தனமும் தவள நீறும்
தழையணுகும் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோல் அனைய காஞ்சிக்
கார்மயல் அஞ்சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங்கிடமா நின்று
எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீராகில்
வீடாத வல்வினை நோய் வீட்டலாமே
(10)
தந்தையார் தாயாருடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தாமாரே
வந்தவாறெங்ஙனே போமாறேதோ
மாயமாம் இதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய
என்றெழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...