திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (5) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

தனித் திருத்தாண்டகம்:

(1)
ஆமயம் தீர்த்தடியேனை ஆளாக் கொண்டார்
    அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையில் கொண்டார்
    தலையதனில் பலிகொண்டார், நிறைவாம் தன்மை
வாமனனார் மா காயத்துதிரம் கொண்டார்
    மான்இடம் கொண்டார், வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கிக்
    கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே
(2)
முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்
    முதுகேழல் முளைமருப்பும் கொண்டார் பூணாச்
செப்புருவ முலை மலையாள் பாகங் கொண்டார்
    செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
    சுடர்முடி சூழ்ந்தடி அமரர் தொழவும் கொண்டார்
அப்பலி கொண்டாயிழையார் அன்பும் கொண்டார்
    அடியேனை ஆளுடைய அடிகளாரே
(3)
முடிகொண்டார் முளையிள வெண்திங்களோடு
    மூசும்இள நாகம் உடனாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலும் ஆர்ப்ப
    அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடி கொண்டார்ந்திலங்கு மழுவலம் கைக்கொண்டார்
    மாலை இடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார், கங்காளம் தோள்மேல் கொண்டார்
    சூலை தீர்த்தடியேனை ஆட்கொண்டாரே
(4)
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்
    பூதப் படைகள் புடைசூழக் கொண்டார்
அக்கினொடு படஅரவம் அரைமேல் கொண்டார்
    அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்
    கொடியானை அடலாழிக்கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
    செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே
(5)
அந்தகனை அயில் சூலத்தழுத்திக் கொண்டார்
    அருமறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
    சுடுகாடு நடமாடும் இடமாக் கொண்டார்
மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
    மாகாளன் வாசல் காப்பாகக் கொண்டார்
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார்
    சமண் தீர்த்தென்றன்னை ஆட்கொண்டார் தாமே
(6)
பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
    பவள நிறம் கொண்டார், பளிங்கும் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவும் கொண்டார்
    நீலநிறம் கோலநிறை மிடற்றில் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மையலாகி
    வந்திட்ட பலி கொண்டார், வளையும் கொண்டார்
ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண் டார்
    உடலுறு நோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே
(7)
அணிதில்லை அம்பலம் ஆடரங்காக் கொண்டார்
    ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர் தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
    காதலார் கோடி கலந்திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
    மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித் தோலினை ஆடைஉடையாக் கொண்டார்
    சூலம்கைக் கொண்டார், தொண்டெனைக் கொண்டாரே
(8)
படமூக்கப் பாம்பணையானோடு வானோன்
    பங்கயன் என்றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்
    கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கில் கரியினுரி மூடிக் கொண்டார்
    நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி இடைமருதும் கொண்டார் பண்டே
    என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே
(9)
எச்சன்நிணத் தலை கொண்டார், பகன் கண் கொண்டார்
    இரவிகளில் ஒருவன்பல் இறுத்துக் கொண்டார்
மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்
    விறலங்கி கரம் கொண்டார், வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார், சந்திரனை உதைத்தார்
    உணர்விலாத் தக்கன் தன் வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டருளும்  செய்தார்
    அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே
(10)
சடையொன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்
    சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றில் புள்ளியுழைத் தோலும் கொண்டார்
    உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றில் பலிகொண்டார் கனலும் கொண்டார்
    காபால வேடம் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
    வெந்துயரம் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே
(11)
குரா மலரோடு அராமதியம் சடைமேல் கொண்டார்
    குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்
சிராமலை தஞ்சேர் இடமாத் திருந்தக் கொண்டார்
    தென்றல்நெடும் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்
    பருப்பதம் கைக்கொண்டார், பயங்கள் பண்ணி
இராவணன் என்றவனைப் பேர்இயம்பக் கொண்டார்
    இடருறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page