(1)
மாலினை மாலுற நின்றான், மலைமகள் தன்னுடைய
பாலனைப், பால்மதி சூடியைப், பண்புணரார் மதில்மேல்
போலனைப், போர்விடை ஏறியைப், பூந்துருத்தி மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை, நாம்அடி போற்றுவதே
(2)
மறியுடையான்; மழுவாளினன்; மாமலை மங்கையொர்பால்
குறியுடையான்; குணமொன்றறிந்தாரில்லை; கூறில்அவன்
பொறியுடை வாளரவத்தவன், பூந்துருத்தி உறையும்
அறிவுடை ஆதி புராணனை நாம்அடி போற்றுவதே
(3)
மறுத்தவர் மும்மதில் மாயவொர் வெஞ்சிலை கோத்தொர்அம்பால்
அறுத்தனை, ஆலதன் கீழனை, ஆல விடமுண்டு அதனைப்
பொறுத்தனைப், பூதப் படையனைப், பூந்துருத்தி உறையும்
நிறத்தனை, நீலமிடற்றனை, யான்அடி போற்றுவதே
(4)
உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற
திருவினைத், தேசம் படைத்தனைச், சென்றடைந்தேனுடைய
பொருவினை எல்லாம் துரந்தனைப், பூந்துருத்தி உறையும்
கருவினைக், கண்மூன்றுடையனை யான்அடி போற்றுவதே
(5)
தக்கன்தன் வேள்வி தகர்த்தவன் சாரமதென்று, கோள்
மிக்கன மும்மதில் வீயவொர் வெஞ்சிலை கோத்தொர் அம்பால்
புக்கனன், பொன் திகழ்ந்தன்னதோர் பூந்துருத்தி உறையும்
நக்கனை, நங்கள் பிரான் தனை, நான்அடி போற்றுவதே
(6)
அருகடை மாலையும் தானுடையான், அழகால் அமைந்த
உருவுடை மங்கையும் தன்னொரு பால், உலகாயும் நின்றான்
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி உறையும்
திருவுடைத் தேச மதியனை யான்அடி போற்றுவதே
(7)
மன்றியும் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி உறையும்
அன்றியும் செய்த பிரான்தனை யான்அடி போற்றுவதே
(8)
மின்னிறம் மிக்கஇடை உமைநங்கையொர் பால் மகிழ்ந்தான்
என்னிறம் என்றமரர் பெரியார் இன்னம் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன், பூந்துருத்தி உறையும்
என்னிற எந்தை பிரான்தனை யான்அடி போற்றுவதே
(9)
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினைச், சென்றடைந்தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினைப், பூந்துருத்தி உறையும்
நந்தியை, நங்கள் பிரான்தனை நான்அடி போற்றுவதே
(10)
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும், மங்கை நடுக்குறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி உறையும்
மிக்கநல் வேத விகிர்தனை நான்அடி போற்றுவதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...