திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (17) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

பாவநாசத் திருக்குறுந்தொகை:

(1)
பாவமும் பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந்தாடும் அவன்கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்குமின்
காவலாளன் கலந்தருள் செய்யுமே
(2)
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஒங்கு மாகடலோத நீராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே
(3)
பட்டர் ஆகிலென், சாத்திரம் கேட்கிலென்
இட்டும் அட்டியும் மீதொழில் பூணிலென்
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென்
இட்டம் ஈசன் எனாதவர்க்கில்லையே
(4)
வேதம் ஓதிலென், வேள்விகள் செய்யிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி அங்கமோர் ஆறும் உணரில்என்
ஈசனை உள்குவார்க்கன்றியில்லையே
(5)
காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி அடைந்தது வேட்கிலென்
ஏலஈசன் என்பார்க்கன்றியில்லையே
(6)
கான நாடு கலந்து திரியிலென்
ஈனமின்றி இருந்தவம் செய்யிலென்
ஊனை உண்டல் ஒழிந்துவான் நோக்கிலென்
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கில்லையே
(7)
கூட வேடத்தராகிக் குழுவிலென்
வாடி ஊனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாடலாளர்க்கல்லால் பயனில்லையே
(8)
நன்று நோற்கிலென், பட்டினி ஆகிலென்
குன்றமேறி இருந்தவம் செய்யிலென்
சென்று நீரில் குளித்துத் திரியிலென்
என்றும் ஈசன் என்பார்க்கன்றி இல்லையே
(9)
கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடினாலும், அரனுக்கு அன்பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே
(10)
மற்று நற்றவம் செய்து வருந்திலென்
பொற்றை உற்றெடுத்தான் உடல் புக்கிறக்கு
உற்ற நற்குரையார் கழல் சேவடி
பற்றிலாதவர்க்குப் பயன் இல்லையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page