திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (16) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

உள்ளத் திருக்குறுந்தொகை:

(1)
நீறலைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆறலைக்க நின்றாடும் அமுதினைத்
தேறலைத் தெளியைத், தெளிவாய்த்ததோர்
ஊறலைக் கண்டு கொண்டதென் உள்ளமே
(2)
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையைத், தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தையைத் தெளிவைத், தெளிவாய்த்ததோர்
எந்தையைக் கண்டு கொண்டதென் உள்ளமே
(3)
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்
கள்ளத்தைக் கழிய மனமொன்றி நின்று
உள்ளத்தில் ஒளியைக் கண்டது உள்ளமே
(4)
அம்மானை அமுதின் அமுதே என்று
தம்மானைத் தத்துவத்தடியார்தொழும்
செம்மான நிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மானைக் கண்டு கொண்டதென் உள்ளமே
(5)
கூறேறும் உமை பாகமோர் பாலராய்
ஆறேறும் சடைமேல் பிறை சூடுவர்
பாறேறும் தலையேந்திப் பலஇல்லம்
ஏறேறும் எந்தையைக் கண்டதென் உள்ளமே
(6)
முன்னெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தந்நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர்
வன்னெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே
என்நெஞ்சில் ஈசனைக் கண்டதென் உள்ளமே
(7)
வென்றானைப் புலனைந்தும், என் தீவினை
கொன்றானைக், குணத்தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றானைக் கண்டு கொண்டதென் உள்ளமே
(8)
மருவினை, மட நெஞ்சம் மனம்புகும்
குருவினைக், குணத்தாலே வணங்கிடும்
திருவினைச், சிந்தையுள் சிவனாய்நின்ற
உருவினைக் கண்டு கொண்டதென் உள்ளமே
(9)
தேசனைத், திருமால் பிரமன் செயும்
பூசனைப், புணரில் புணர்வாயதோர்
நேசனை, நெஞ்சினுள் நிறைவாய் நின்ற
ஈசனைக் கண்டு கொண்டதென் உள்ளமே
(10)
வெறுத்தான் ஐம்புலனும், பிரமன்தலை
அறுத்தானை, அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானைக், காலினில் விரலொன்றினால்
ஒறுத்தானைக் கண்டு கொண்டதென் உள்ளமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page