சித்தத்தொகை திருக்குறுந்தொகை:
(1)
சிந்திப்பார் மனத்தான் சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணியார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான் அடி
வந்திப்பார் அவர் வானுலகாள்வரே
(2)
அண்டமார் இருளூடு கடந்து உம்பர்
உண்டு போலுமோர் ஒண்சுடர், அச்சுடர்
கண்டிங்கு ஆரறிவார், அறிவாரெலாம்
வெண்திங்கள் கண்ணி வேதியன் என்பரே
(3)
ஆதியாய் அவன்ஆரும் இலாதவன்
போது சேர்புனை நீள்முடிப் புண்ணியன்
பாதிப் பெண்ணுருவாகிப் பரஞ்சுடர்ச்
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே
(4)
இட்டதிட்டதோர் ஏறுகந்தேறியூர்
பட்டி துட்டங்கனாய்ப் பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கையனாகிலும் வானவர்
அட்ட மூர்த்தியர் அருள் என்றடைவரே
(5)
ஈறில் கூறையனாகி எரிந்தவெண்
நீறு பூசி, நிலாமதி சூடிலும்
வீறிலாதன செய்யினும் விண்ணவர்
ஊறலாய் அருளாய் என்றுரைப்பரே
(6)
உச்சி வெண்மதி சூடிலும், ஊன்அறாப்
பச்சை வெண்தலை ஏந்திப் பலஇல்லம்
பிச்சையே புகுமாகிலும், வானவர்
அச்சம் தீர்த்தருளாய் என்றடைவரே
(7)
ஊரிலாய் என்று ஒன்றாக உரைப்பதோர்
பேரிலாய், பிறை சூடிய பிஞ்ஞகா
காருலாம் கண்டனே, உன் கழலடி
சேர்விலார்கட்குத் தீயவை தீயவே
(8)
எந்தையே எம்பிரானே எனஉள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார் அடைந்தார்களே
(9)
ஏன வெண்மருப்போடென்பு பூண்டெழில்
ஆனை ஈருரி போர்த்தனல் ஆடிலும்
தான வண்ணத்தனாகிலும் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே
(10)
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனே
(11)
ஒருவனாகி நின்றான் இவ்வுலகெலாம்
இருவராகி நின்றார்கட்கறிகிலான்
அருவரா அரை ஆர்த்தவனார் கழல்
பரவுவார்அவர் பாவம் பறையுமே
(12)
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாதனே அருளாய் என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப்படும் அவர்
பாதமேத்தப் பறையும்நம் பாவமே
(13)
ஔவ தன்மையவரவர் ஆக்கையான்
வெவ்வ தன்மையன் என்பதொழிமினோ
மௌவல் நீள்மலர் மேலுறைவானொடு
பவ்வ வண்ணனுமாய்ப் பணிவார்களே
(14)
அக்கும் ஆமையும் பூண்டு அனலேந்திஇல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவரால் தொழுவானையே
(15)
கங்கை தங்கிய செஞ்சடை மேல்இளம்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்கணார் எழில் வானம் வணங்கவே
அங்கணாற்கதால் அவன் தன்மையே
(16)
ஙகர வெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடியே புகலாகுமே
(17)
சரணமாம் படியார் பிறர் யாவரோ
கரணம் தீர்த்துயிர் கையில் இகழ்ந்தபின்
மரணம் எய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎயில் எய்தவன் அல்லனே
(18)
ஞமன் என்பான் நரகர்க்கு நமக்கெலாம்
சிவனென்பான் செழு மான்மறிக் கையினான்
கவனம் செய்யும் கனவிடை ஊர்தியான்
தமரென்றாலும் கெடும் தடுமாற்றமே
(19)
இடபமேறியும் இல்பலி ஏற்பவர்
அடவி காதலித்தாடுவர், ஐந்தலைப்
படவம் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கடவிராய்ச் சென்று கைதொழுதுய்ம்மினே
(20)
இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளரவம் மதியோடுடன்
அணைந்த அஞ்சடை ஆனவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே
(21)
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்
கருமம் தான், கருமான்மறிக் கையினான்
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமம் சேரழல் தீவினையாளரே
(22)
நமச்சிவாய என்பார் உளரேல்அவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே
(23)
பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் கால நின்றேத்துமின், தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்பனிக் கெடுமாறது போலுமே
(24)
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்தராயவர் காப்பினால்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெய ஆக்கையை நீக்குவர் பேயரே
(25)
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்தவன் மாலெரி ஆயினான்
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே
(26)
அரவம் ஆர்த்தனலாடிய அண்ணலைப்
பரவுவாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவனும் குளிர் போதின்மேல்
கரவில் நான்முகனும் கரியல்லரே
(27)
அழலம் கையினன், அந்தரத்தோங்கி நின்று
உழலும் மூவெயில் ஒள்ளழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு, தாவினான்
கழலும் சென்னியும் காண்டற்கரியனே
(28)
இளமை கைவிட்டகறலும் மூப்பினார்
வளமை போய்ப் பிணியோடு வருதலால்
உளமெலாம் ஒளியாய் மதியாயினான்
கிளமையே கிளையாக நினைப்பனே
(29)
தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தல் கரியனே
(30)
இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலங்கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும்
வலங்கொண்டேத்துவார் வானுலகாள்வரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...