மனத்தொகைத் திருக்குறுந்தொகை:
(1)
பொன்னுள்ளத் திரள், புன்சடையின் புறம்
மின்னுள்ளத் திரள் வெண்பிறையாய், இறை
நின் உள்ளத்தருள் கொண்டு இருள் நீங்குதல்
என் உள்ளத்துளது எந்தை பிரானிரே
(2)
முக்கணும் உடையாய், முனிகள் பலர்
தொக்கெணும் கழலாய், ஒரு தோலினோடு
அக்கணம் அரையாய், அருளே அலாது
எக்கணும் இலன் எந்தை பிரானிரே
(3)
பனியாய், வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய், நீயுலகம் முழுதாளினும்
தனியாய் நீ, சரண் நீ, சலமே பெரிது
இனியாய் நீயெனக்கு எந்தை பிரானிரே
(4)
மறையும் பாடுதிர், மாதவர் மாலினுக்கு
உறையும் ஆயினை, கோளரவோடொரு
பிறையும் சூடினை என்பதலால் பிறிது
இறையும் சொல்லிலை எந்தை பிரானிரே
(5)
பூத்தார் கொன்றையினாய், புலியின்அதள்
ஆர்த்தாய், ஆடரவோடனலாடிய
கூத்தா, நின்குரையார் கழலே அலது
ஏத்தா நாஎனக்கு எந்தை பிரானிரே
(6)
பைம்மாலும் அரவா, பரமா, பசு
மைம்மால் கண்ணியோடேறு மைந்தா எனும்
அம்மால் அல்லது மற்றடி நாயினேற்கு
எம்மாலும் இலேன் எந்தை பிரானிரே
(7)
வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழலாற்கல்லது
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே
(8)
திகழும் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழும் ஒண்பொருளாயின நீதியென்
புகழுமாறலால் உன பொன்னடி
இகழுமாறு இலன் எந்தை பிரானிரே
(9)
கைப்பற்றித் திருமால் பிரமன் உனை
எப்பற்றி அறிதற்கரியாய் அருள்
அப்பற்றல்லது மற்றடி நாயினேன்
எப்பற்றும் இலேன் எந்தை பிரானிரே
(10)
எந்தை எம்பிரான் என்றவர் மேல்மனம்
எந்தை எம்பிரான் என்றிறைஞ்சித் தொழுது
எந்தை எம்பிரான் என்றடி ஏத்துவார்
எந்தை எம்பிரான் என்றடி சேர்வரே