திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (13) – (பொது):

<– திருப்பூந்துருத்தி

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை:

(1)
புக்கணைந்து புரிந்தலர் இட்டிலர்
நக்கணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்கணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற்றார் அங்கிருவரே
(2)
அலரு நீரும் கொண்டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலம் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச்
செலவு காணலுற்றார் அங்கிருவரே
(3)
ஆப்பி நீரோடு அலகு கைக்கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற்றார் அங்கிருவரே
(4)
நெய்யும் பாலும் கொண்டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற்றார் அங்கிருவரே
(5)
எருக்கங்கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்
தருக்கினால் சென்று தாழ்சடை அண்ணலை
நெருக்கிக் காணலுற்றார் அங்கிருவரே
(6)
மரங்களேறி மலர்பறித்திட்டிலர்
நிரம்ப நீர் சுமந்தாட்டி நினைந்திலர்
உரம் பொருந்தி ஒளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற்றார் அங்கிருவரே
(7)
கட்டுவாங்கம் கபாலங்கைக் கொண்டிலர்
அட்டமாகம் கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற்றார் அங்கிருவரே
(8)
வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறுகந்து ஏறெரி வண்ணனை
அந்தம் காணலுற்றார் அங்கிருவரே
(9)
இளவெழுந்த இருங்குவளை மலர்
பிளவு செய்து பிணைத்தடி இட்டிலர்
களவு செய்தொழில் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற்றார் அங்கிருவரே
(10)
கண்டி பூண்டு கபாலம் கைக்கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணலுற்றார் அங்கிருவரே
(11)
செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற்றேன் என்று இலங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page