திருப்பூந்துருத்தி – அப்பர் தேவாரம் (1)

<– திருப்பூந்துருத்தி

(1)
நில்லாத நீர்சடைமேல் நிற்பித்தானை
    நினையாஎன் நெஞ்சை நினைவித்தானைக்
கல்லாதன எல்லாம் கற்பித்தானைக்
    காணாதன எல்லாம் காட்டினானைச்
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத்
    தொடர்ந்திங்கடியேனை ஆளாக் கொண்டு
பொல்லாஎன் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
    புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(2)
குற்றாலம் கோகரணம் மேவினானைக்
    கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை
உற்றால நஞ்சுண்டு ஒடுக்கினானை
    உணராஎன் நெஞ்சை உணர்வித்தானைப்
பற்றாலின் கீழ்அங்கிருந்தான் தன்னைப்
    பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றாடு அரவார்த்த புநிதன் தன்னைப்
    புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(3)
எனக்கென்றும் இனியானை, எம்மான் தன்னை
    எழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில்
    நில்லானை, நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியேனை ஆளாக் கொண்ட
    சங்கரனைச், சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(4)
வெறியார் மலர்க்கொன்றை சூடினானை
    வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட்டானை
அறியாதடியேன் அகப்பட்டேனை
    அல்லல்கடல் நின்றும்ஏற வாங்கி
நெறிதான் இதுவென்று காட்டினானை
    நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியாடரவார்த்த புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(5)
மிக்கானை, வெண்ணீறு சண்ணித்தானை
    விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை, நான்மறைகள் பாடினானை
    நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத், தண்தாமரை மேல்அண்ணல்
    தலைகொண்டு மாத்திரைக்கண் உலகமெல்லாம்
புக்கானைப், புண்ணியனைப் புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(6)
ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா
    அசைத்தானை, அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம்
    புணர்ந்தானைப், பூங்கணையான் உடலம் வேவப்
பார்த்தானைப் பரிந்தானைப், பனிநீர்க் கங்கை
    படர்சடைமேல் பயின்றானைப், பதைப்ப யானை
போர்த்தானைப், புண்ணியனைப் புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(7)
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
    இமைப்பளவில் பொடியாக, எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி
    உமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச், சீரார்ந்த பூதம் சூழத்
    திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப், புண்ணியனைப் புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(8)
வைத்தானை வானோர் உலகமெல்லாம்
    வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை, வேண்டிற்றொன்று ஈவான் தன்னை
    விண்ணவர்தம் பெருமானை, வினைகள் போக
உய்த்தானை, ஒலிகங்கை சடைமேல் தாங்கி
    ஒளித்தானை, ஒருபாகத்துமையோடு ஆங்கே
பொய்த்தானைப், புண்ணியனைப் புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(9)
ஆண்டானை வானோர் உலகமெல்லாம்
    அந்நாளறியாத தக்கன் வேள்வி
மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி
    விரைமலர்மேல் நான்முகனும் மாலும் தேட
நீண்டானை, நெருப்புருவம் ஆனான் தன்னை
    நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப், புண்ணியனைப் புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
(10)
மறுத்தானை மலை கோத்தங்கெடுத்தான் தன்னை
    மணிமுடியோடு இருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை, எழுநரம்பின் இசை கேட்டானை
    எண்திசைக்கும் கண்ணானான் சிரமேல்ஒன்றை
அறுத்தானை, அமரர்களுக்கமுதீந்தானை
    யாவர்க்கும் தாங்கொணா நஞ்சமுண்டு
பொறுத்தானைப், புண்ணியனைப் புநிதன் தன்னைப்
    பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page